Media

பதிவு செய்த நாள்: ஞாயிறு, டிசம்பர் 27,2015

அகண்ட பாரதத்தின் தலை நகரான டெல்லி, இந்த கடுங்குளிரிலும் தகிக்கிறது. காரணம், மாநிலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அரசு மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் உஷ்ணம் தான். உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை விட 10 மடங்கு அதிக மாசு நிறைந்த காற்றை அங்குள்ள மக்கள் சுவாசித்தால் எப்படி சும்மா இருக்க முடியும்? அதுதான் மக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொதித்தெழ செய்தது. அதன் விளைவுதான் இன்று டெல்லியின் காற்று மாசுபாட்டை குறைக்க அதிரடி நடவடிக்கைகளை அரசு எடுக்க செய்திருக்கிறது, அல்லது யோசிக்க வைத்திருக்கிறது. மனிதனின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சுற்றுச்சூழல் மாசுபாட்டில் மிக முக்கியமானவை நிலம், நீர், காற்று மாசுபாடு. இதில் முதல் 2 மாசை மனிதனால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். ஆனால் காற்று மாசுபாட்டை அவ்வளவு எளிதில் அறிய முடியாது. ஆனால் மிக ஆபத்தானது இதுதான். நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் எண்ணிலடங்கா நுண்துகள்கள் உள்ளன. காற்றில் உள்ள மாசு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் குறிப்பிடுவதில் ‘பிஎம் 10’ மற்றும் ‘பிஎம் 2.5’ என்ற அளவு குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

அது என்ன பிஎம் 10 ?

பார்ட்டிகுலேட் மேட்டர் என்பதன் சுருக்கம் தான் ‘பிஎம்’ ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்பது ஒரு மைக்ரான் எனப்படுகிறது. காற்றில் உள்ள நுண் துகள்களின் அளவு 10 மைக்ரான் என்ற அளவில் பெரியதாக இருக்கும்போது அது பிஎம்–10 எனப்படுகிறது.

துகள்களின் அளவு 2.5 மைக்ரான் அளவுக்கு சிறியதாக இருக்கும்போது அது பிஎம் 2.5 எனப்படுகிறது. துகள்களின் அளவு சிறியதாக இருப்பவைதான் மனிதனை அதிகம் பாதிக்கின்றன. சல்லடை மூலமாக மணலை சலிக்கும்போது பெரிய அளவிலான மணல் மேலே தங்கிவிடும். சிறிய அளவிலான மணல் கீழே விழும் அல்லவா?

அதுபோல நாம் காற்றை சுவாசிக்கும்போது நமது காற்றுக்குழாய் மற்றும் நுரையீரல் என்ற சல்லடை வழியாகச் செல்லும் மாசுக்களில் பெரிய அளவிலான துகள்கள், அதாவது பிஎம் 10 அளவுக்கு பெரிய துகள்கள் மேலே தங்கிவிடுகின்றன. பின்னர் அவை சளி மூலமாக வெளியேறிவிடுகின்றன. அல்லது அவற்றில் ஒரு பகுதி சளியுடன் கலந்து வயிற்றுக்குள் சென்று விடுகின்றன.

காற்றில் உள்ள பிஎம் 2.5 அளவிலான சிறிய துகள்கள். காற்றுக்குழாய் மற்றும் நுரையீரலை கடந்து சுவாசப் பையின் அடிப்பகுதிவரை சென்று அங்கேயே தங்கிவிடுகின்றன. எனவே அவைதான் அதிக ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன.

பிஎம் 10 அளவிலான துகள்களால் மூச்சுப்பிரச்சினை ஏற்பட்டு பின்னர் அது ஆஸ்துமாவுக்கு காரணமாக அமையலாம். பிஎம் 2.5 அளவிலான துகள்களால் நுரையீரல் நோயும், பின்னர் புற்று நோயும் ஏற்படும் ஆபத்து உண்டு. காற்றில் காணப்படும் தூசி, புகை, கட்டுமானப் பணியின்போது ஏற்படும் மாசு ஆகியவை காரணமாக பிஎம்–10 அளவிலான துகள்கள் ஏற்படுகின்றன.

வாகனங்களால் ஏற்படும் புகை, இரும்பு போன்ற கனரக பொருட்களை சூடுபடுத்துவதால் ஏற்படும் மாசு ஆகியவற்றில் பிஎம்–2.5 அளவிலான துகள்கள் உருவாகின்றன.

இதனால்தான் காற்றில் ஏற்படும் மாசு பிரச்சினையில், வாகன புகை அதிகம் அச்சுறுத்தலாக இருக்கிறது. நாம் உள்ளிழுக்கும் காற்றில் ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரோ கிராம் பிஎம்.10 துகள்கள் என்ற அளவிலேயே நுண்துகள்கள் இருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.

ஆனால் டெல்லிவாசிகள் தற்போது சுவாசிக்கும் காற்றில் உள்ள நுண்துகள்களின் செறிவு, இதைவிட 10 மடங்கு அதிகம். மிக அதிக மக்கள் தொகையை கொண்ட சீனாவின் தலைநகர் பீஜிங்கை விட 3 மடங்கு அதிகம். அந்தவகையில் டெல்லியைத்தான் காற்று மாசுபாடு நிறைந்த பெருநகரமாக, கடந்த 2013–ம் ஆண்டு உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.

இதைப்போல புவி வெப்பத்தை அதிகரிக்கும் பசுமைக்கூட வாயுக்களை ஏற்படுத்துவதில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 3–வது இடத்தில் இந்தியா இருப்பதாகவும் அறிவித்தது.

178 நாடுகளின் காற்றின் தரத்தை ஆய்வு செய்து கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், இந்தியா 174–வது இடத்தில் இருந்தது. இதனால் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது என்பது வளரும் நாடான இந்தியாவுக்கு மிகப்பெரும் சவாலாகவே உள்ளது.

பாரீசில் சமீபத்தில் நடந்து முடிந்த உலக பருவநிலை மாற்ற மாநாட்டில் புவி வெப்பத்தை 2 டிகிரி செல்சியசுக்கு கீழாக குறைக்க வேண்டும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் முக்கிய நோக்கமே புவியின் பருவநிலை அமைப்பினை சேதப்படுத்துகிற காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதுதான்.

இப்படிப்பட்ட சூழலில்தான் தலைநகர் டெல்லியின் காற்று மாசுபாடு பிரச்சினை தற்போது விசுவரூபம் எடுத்து உள்ளது. இதற்கு காரணமாக, நகரை சுற்றியுள்ள நிலக்கரி நிறுவனங்கள், டீசல் மின் மோட்டார்கள் என பல்வேறு காரணிகள் கூறப்பட்டாலும், பிரதான காரணமாக டீசல் வாகனங்களை தான் பசுமை தீர்ப்பாயமும், நிபுணர்களும்

கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

கடந்த 1980–ல் வெறும் 5 லட்சம் வாகனங்களை கொண்டிருந்த டெல்லி, இன்றைய நிலவரப்படி 88 லட்சம் வாகனங்களை கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு ஆண்டுக்கு 5 லட்சம் புதிய வாகனங்கள் வாங்கப்படுகின்றன.

சுமார் 1.70 கோடி மக்கள் தொகை கொண்ட டெல்லியில் இன்று 15 சதவீதம் பேர் சொந்தமாக கார் வைத்துள்ளனர். அங்குள்ள மொத்த வாகனங்களில், 56 லட்சம் இருசக்கர வாகனங்கள் அடங்கியுள்ளன.

இவ்வாறு பெருகிக்கொண்டே செல்லும் இந்த வாகனங்களின் என்ஜின் அமைப்புகள் மற்றும் எரிபொருளின் தரம் ஆகியவற்றால் அவற்றில் இருந்து வெளியேறும் புகை மக்களின் உயிருக்கு எமனாகிறது.

டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. பெட்ரோல் வாகனங்களை விட, வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் நுண்துகள் செறிவும், நைட்ரஜன் ஆக்சைடும், கந்தகமும் அதிக அளவில் காணப்படுகின்றன.

இதனால் தான் புற்றுநோய் காரணிகளில் டீசல், முதல் இடம் பிடித்து இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. டெல்லியில் வாழும் மொத்த மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் நகரின் முக்கியமான பகுதிகளில் வசிக்கின்றனர். அன்றாடம் சாலையில் செல்லும் வாகனங்கள் உமிழும் புகைக்கு, இவர்களின் நுரையீரல் தான் இலக்கு.

இதனால் ஆண்டுதோறும் நுரையீரல் தொடர்பான நோய்க்கு 7 ஆயிரத்து 350 முதல் 16 ஆயிரத்து 200 பேர் வரை பலியாகிறார்கள். அதுமட்டுமின்றி சுமார் 60 லட்சம் ஆஸ்துமா நோயாளிகளையும் டெல்லி வைத்திருக்கிறது. இத்தகைய ஆபத்துக்கு முடிவு கட்டுவதற்காக தற்போது பசுமை தீர்ப்பாயம் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. டெல்லியில் வந்து குவியும் வாகனங்களுக்கு கடிவாளம் போட்டிருக்கிறது.

அதன்படி 15 ஆண்டு பழமை வாய்ந்த பெட்ரோல் வாகனங்கள், 10 ஆண்டு பழமை வாய்ந்த டீசல் வாகனங்களுக்கு புதுப்பிப்பு சான்றிதழ் வழங்க தடை விதித்தது. மத்திய, மாநில அரசுகளின் டீசல் வாகன புதிய கொள்முதலுக்கும் வந்தது தடை.

இதைப்போல மாநில அரசும் வாகன இயக்கத்தில் புதிய வழிமுறை ஒன்றை கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது. அதாவது ஒற்றைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்கள் ஒருநாளும், இரட்டைப்படை பதிவு எண் கொண்ட வாகனங்கள் மற்றொரு நாளும் என முறைவைத்து இயக்க பரிசீலித்து வருகிறது.

இந்த நடவடிக்கைகளை வரவேற்றுள்ள தன்னார்வலர்கள், அரசுக்கு மேலும் சில பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர். காரீயம் இல்லா எரிபொருள் பயன்பாடு, எரிவாயுவில் இயங்கும் போக்குவரத்தை ஊக்குவித்தல், பழைய வாகனங்கள் மற்றும் 2 ஸ்ட்ரோக் வாகனங்களை முழுவதுமாக ஒழித்தல், பொது போக்குவரத்தை ஊக்குவித்தல், நகருக்குள்..

லாரிகளை தடை செய்தல், வாகன நிறுத்த விதிகளை கடுமையாக்குதல் போன்றவை அவற்றில் சில. மாநில மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த பரிந்துரைகளை பரிசீலித்து வரும் டெல்லி அரசு, அவற்றில் சிலவற்றை செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

காற்று மாசுபாடு விஷயத்தில் டெல்லி அரசும், மக்களும் விழித்திருக்கும் இந்த வேளையில், நமது சென்னையின் தூய்மை நிலை குறித்த கேள்வியும் எழாமல் இல்லை.

இங்கு சமீபத்தில் பேரழிவை ஏற்படுத்திய வடகிழக்கு பருவமழை 2 நல்ல காரியங்களை செய்தது. ஒன்று, கூவம் மற்றும் அடையாறு ஆறுகளை சுத்தப்படுத்தியது (அவை தற்போது பழைய நிலைக்கு திரும்பியிருப்பது வேறு விஷயம்). இரண்டாவது, காற்றின் மாசுபாட்டை மழை பெய்த நேரத்திலாவது வெகுவாக குறைத்தது.

டெல்லியை போன்ற பெருநகரங்களை ஒப்பிடுகையில் சென்னை சற்று தூய்மையான நகரம் என்றே உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டு இருக்கிறது. இதற்கு காரணம், சென்னை ஒரு கடற்கரை நகரம். இங்கு வீசும் கடற்காற்று நகரின் காற்று மாசுக்களை அடித்து செல்வதாக கண்டறியப்பட்டு உள்ளது.

இதனால் நகரின் காற்றில் காணப்படும் பிஎம்.10 மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு, கந்தகம் உள்ளிட்ட மாசுகளின் அளவு கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

ஆயினும் சென்னை நகரில் பரவலாக பல்வேறு தொழிற்சாலைகள் வரிசை கட்டியுள்ளன. சுமார் 45 லட்சம் வாகனங்கள் சாலைகளை ஆக்கிரமித்து உள்ளன. அத்துடன் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் புதிய வாகனங்களும் இறக்குமதியாகின்றன.

இதைப்போல நாளும் விரிவடைந்து வரும் நகர கட்டுமானங்கள், அன்றாட நிகழ்வாகி விட்ட வாகன நெரிசல், தூசிகளை உற்பத்தி செய்யும் சாலைகள் போன்ற காரணிகளால் வரும் காலங்களில் நகரின் தூய்மைக்கு சவால் ஏற்படுவது இயல்பே.

காற்று மாசால் இன்று டெல்லிக்கு ஏற்பட்டு இருக்கும் கடும் நெருக்கடி, நாளை சென்னைக்கு ஏற்படலாம் என்று அஞ்சப்படுகிறது.

எனவே சமீபத்திய சென்னை வெள்ள பாதிப்பை கையாண்டது போல் வந்தபின் பதறாமல், தொலைநோக்கு பார்வையுடன் வருமுன் நடவடிக்கை எடுப்பதே அரசு மற்றும் அதிகாரிகள் முன் இருக்கும் கடமையாகும்.


ஆய்வுகள் கூறுவது என்ன?

டெல்லி காற்று மாசுபாடு தொடர்பாக எதிர்ப்புகளும், நடவடிக்கைகளும் ஒருபுறம் நடந்து வந்தாலும், சமீப ஆண்டுகளாக அங்கு மாசுபாட்டின் அளவு குறைந்திருப்பதாகவே ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அங்கு காற்றில் கலந்துள்ள பிஎம்.10–ன் அளவு கடந்த 2011–ம் ஆண்டை ஒப்பிடுகையில், தற்போது கணிசமாக குறைந்திருக்கிறது. டெல்லியின் ஆர்.கே.புரத்தில் கடந்த 2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வுப்படி ஒரு கனமீட்டருக்கு 520 மைக்ரோ கிராம் பிஎம்.10 காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு அது 410 மைக்ரோ கிராம் பிஎம்.10 அளவே காணப்பட்டது.

இதுவே கடந்த 2012, 13, 14–ம் ஆண்டுகளில் முறையே 550, 505, 450 மைக்ரோ கிராம் என காணப்பட்டது. அங்கு மேலும் சில முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற நிலையே உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மாசுபாட்டின் அளவு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? என அரசு அதிகாரிகள் புலம்புகின்றனர்.

ஆய்வுகள் கூறுவது என்ன?

அமெரிக்கா: காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில் சுத்தமான காற்று சட்டம் ஒன்றை உருவாக்கி, திட்டங்கள் அடிப்படையில் செயல்படுத்துகிறது. அங்கு 1970 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 238 சதவீதமாக உயர்ந்த நிலையிலும், தேசிய அளவிலான மாசுபாடு 69 சதவீதமாக குறைந்திருக்கிறது.

சிங்கப்பூர்:தீவிர தொழில்வளர்ச்சி இருந்த போதும், இங்கு உருவாக்கப்பட்டுள்ள மாசுபாட்டு எதிர்ப்பு பிரிவு, நகரை சுத்தமாகவும், பசுமையாகவும் பராமரித்து வருகிறது.

ஜப்பான்:970–களில் மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் அடுத்தடுத்து 4 சட்டங்களை அரசு நிறைவேற்றியது. இன்று, உலகின் மிகக்குறைந்த மாசுபாடு கொண்ட நாடுகளில் ஜப்பானும் ஒன்று.

ஹாங்காங்:காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் பழைய டீசல் வாகனங் களுக்கு பதிலாக புதிய வாகனம் வாங்குவோருக்கு, 30 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. வாகனமே வாங்காதோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

லண்டன்:மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு ரீசார்ஜ் மையங்கள் உருவாக்கியிருப்பதுடன், இந்த வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணத்தையும் குறைத்துள்ளது. மேலும் ஒற்றைப்படை–இரட்டைப்படை வாகன இயக்கமும் உள்ளது.